தேவ தயவு
கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஜசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். (எபேசியா; 2:6;7).
கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஜசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். தேவன் நம்மேல் வைத்த தயவினாலே தகுதியில்லாத நம்மை அவரோடு கூட உட்காரும்படி செய்தார்.
தேவன் தம்மோடு ஒவ்வொரு காரியத்திலும் உனக்கு பங்கு வைத்திருக்கிறார். அவருடைய பரிசுத்தத்தில் உனக்கு பங்குவைத்துள்ளார். அவர் பரிசுத்தர் எனவே நான் பரிசுத்தராய் இருக்கிறது போல நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் என்று சொன்னார். அவருடைய திவ்ய சுபாவத்தில் உனக்கு பங்கு வைத்துள்ளார். (2பேது 1:4). அவருடைய சுதந்திரத்தில் உனக்கு பங்கு உண்டு (ரோ 8:17).
அவருடைய அதிகாரத்தில் உனக்கு பங்கு உண்டு. வானத்திலும் பூமியிலும் சலக அதிகாரம் எனக்கு உண்டு என்று சொன்ன இயேசு கிறிஸ்து (மத் 28:18), சத்துருவின் சகல வல்லமைகளை மேற்கொள்ள உனக்கு அதிகாரத்தை கொடுத்திருக்கிறார் (லூக் 10:19). அவருடைய மகிமையிலும் பங்கு கொடுத்திருக்கிறார் (2கொரி 3:18).
இவை அனைத்தும் தேவன் உன் மேல் வைத்துள்ள தயவை வெளிப்படுத்துகிறது. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் தேவ கிருபையிலும் , மனித தயவிலும் வளர்ந்தார். ”இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.” (லூக் 2:52).
ஆங்கில வேதாகமத்தில் வாசிக்கும் போது "Jesus increased in favour with God and man" என்று வாசிக்கிறோம். ஆம் இவ்வுலகத்தில் வாழும் உனக்கு தேவனுடைய கிருபை, மனிதனுடைய தயவும் மிகவும் அவசியம். தேவனுடைய கிருபை இல்லாமல் உன்னால் மனிதனுடைய தயவை பெற முடியாது. பொன் வெள்ளியைக் காட்டிலும் தயையே நலம் என்று வேதம் சொல்லுகிறது. தயவு என்றால் என்ன? ”நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை” (நீதி 19:22).
நன்மை செய்ய ஒரு மனிதன் ஆசை கொண்டால் அதுவே தயை. ஆம் மனிதன் நன்மை செய்யவேண்டுமென்றால் அவ்வளவு கடினம். நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை என்று வேதம் சொல்லுகிறது. ”எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.” <சங் 14:3). எனவே நன்மை தேவனிடத்திலிருந்து வரவேண்டும்.
”நன்மையான எந்த ஒரு ஈவும் சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது. அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.” (யாக் 1:17).
அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன். இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.” (ஆதி 32:10). யாக்கோபு தேவனுடைய தயவை பெற்றிருந்தான்.
யாக்கோபு தன்னுடைய மாமனாகிய லாபானின் வீட்டில் இருக்கும் போது, கர்த்தர் யாக்கோபுக்கு தரிசனமானார். ”அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார். இதோ, இருக்கிறேன் என்றேன். அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார். ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது. லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன். நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே. இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான். ” (ஆதி 31:11-13).
தேவனுடைய கட்டளைக்கு யாக்கோபு கீழ்படிந்தான். லாபானை விட்டு புறப்படுவதை யாக்கோபு லாபானுக்கு அறிவிக்கவில்லை. ”யாக்கோபு தான் ஓடிப்போகிறதைச் சீரியனாகிய லாபானுக்கு அறிவியாமல், திருட்டளவாய்ப் போய்விட்டான்.” (ஆதி 31:20).
யாக்கோபு ஓடிப்போவது லாபானுக்கு அறிவிக்கப்பட்டபோது அவன் யாக்கோபின் மேல் கோபங்கொண்டு அவனை பின்சென்றான். லாபானிடத்தில் யாக்கோபை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்ற வெறி காணப்பட்டது. ”உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு. ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று ராத்திரி என்னோடே சொன்னார்.” (ஆதி 31:29).
கர்த்தர் யாக்கோபின் மேல் தயவு வைத்தபடியினால், லாபானிடம் நீ யாக்கோபுக்கு நன்மையே அன்றி தீமை செய்யாதே என்று எச்சரித்தார். ”அன்று ராத்திரியிலே தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் தோன்றி: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார்.” (ஆதி 31:24).
ஆம் அன்றைக்கு கர்த்தருடைய தயவு யாக்கோபின் மேல் இருந்தபடியினால் தேவன் யாக்கோபின் வாழ்கையில் தீங்கை அனுமதிக்கவில்லை. எனவே யாக்கோபு இவ்விதமாய் சொல்லுகிறான் ”அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல”. யாக்கோபுக்கு மனுஷனுடைய கண்களில் தயவு கிடைக்கும்படி செய்தார்.
இன்றைக்கு தேவன் உனக்கும் தமது தயவை வெளிப்படுத்துகிறார். உனக்கு விரோதமாய் உன் மேல் எரிச்சலாய் இருக்கிறவர்கள் உள்ளத்தில் கர்த்தர் பேசுவார். உனக்கு மனுஷனுடைய கண்களில் தயவு கிடைக்கச் செய்து நீ எதிர்பார்த்திருக்கும் காரியத்தை பெற்றுக்கொள்ளும்படி செய்வார்.
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர், அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்தநேரமும் வந்தது. - சங்கீதம் 102:13.